அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் மாணவர் விடுதிகளில் சிறப்பு சிகிச்சை மையம்


அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் மாணவர் விடுதிகளில் சிறப்பு சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 12 May 2021 1:50 AM IST (Updated: 12 May 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர் விடுதிகளில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம்:

படுக்கை, இடவசதி பற்றாக்குறை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 220 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் படுக்கை, இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தொற்று உள்ள ஒன்று முதல் 3 பேரை மட்டுமே அனுமதிக்கின்றனர். பின்னர் அவர்களையும் சிகிச்சைக்காக திருச்சி, அரியலூர் போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.
சிகிச்சை மையம்
இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் 3 விடுதிகள் தற்காலிக சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, அதில் 91 படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும், உரிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்பதை பார்வையிட்டார். மேலும் சிறப்பு சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவர்களை கொண்டு நோயாளிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா தடுப்பூசி
மேலும் விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாணதிரையான்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், அவர் பார்வையிட்டார். அப்போது உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story