நாகர்கோவிலில் காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகள் மூடல்


நாகர்கோவிலில் காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகள் மூடல்
x
தினத்தந்தி 12 May 2021 1:53 AM IST (Updated: 12 May 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் எதிரொலியாக நாகர்கோவிலில் காய்கறி சந்தைகள் மற்றும் மீன் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன.

நாகர்கோவில், 
கொரோனா பரவல் எதிரொலியாக நாகர்கோவிலில் காய்கறி சந்தைகள் மற்றும் மீன் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் 2-வது நாள் முழு ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் வடசேரி கனக மூலம் சந்தை, மீன் மார்க்கெட், கணேசபுரம் மீன் மார்க்கெட், ராமன்புதூர் சந்தை உள்ளிட்ட சந்தைகளும், மார்க்கெட்டுகளும் நேற்று முன்தினம் வழக்கம் போல செயல்பட்டன. இதனால் சம்பந்தப்பட்ட சந்தைகளிலும், மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஏற்கனவே தனியாக செயல்படும் காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் தவிர மற்ற சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகள் திறக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் நாகர்கோவில் மாநகராட்சியில் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகள் வழக்கம்போல் செயல்பட்டதோடு கூட்டமும் கூடியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சந்தைகள் மூடல்
இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் அனைத்து சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளை மூட கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு சந்தைகள் நேற்று மூடப்பட்டன. ஒரு சில மீன் மார்க்கெட்டுகள் மூடப்பட்டது. மீதமுள்ள மீன் மார்க்கெட்டுகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
இதே போல நாகர்கோவில் வடசேரியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் மூடப்பட்டது. மேலும் அங்கு மீண்டும் கடைகளை திறக்காதபடி மார்க்கெட் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சரலூர் மீன் சந்தை, கணேசபுரம் மீன் சந்தை ஆகியவையும் செயல்படவில்லை. இதனால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை நேற்று மூடப்பட்டது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோட்டாரில் உள்ள கூழக்கடை பஜாரில் வெற்றிலை பாக்கு, வாழை இலை வியாபாரம் நடக்கும். ஆனால் நேற்று கூழக்கடை பஜார் மூடப்பட்டது.
நடைபாதையில் வியாபாரம்
முன்னதாக வடசேரி கனக மூலம் சந்தையிலும் கோட்டார் மார்க்கெட்டிலும் ஒரு சில வியாபாரிகள் கடைகளை திறந்து இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர்கள் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். கடையை திறந்து வைத்திருந்த வியாபாரிகளிடம் கடையை மூடுமாறு கூறினார்கள். இதையடுத்து வியாபாரிகள் கடையை மூடினார்கள். கடைகள் அனைத்தும் மூடப்பட்டதையடுத்து கூழக்கடை பஜாருக்கு செல்லும் சாலை சங்கிலியால் மூடப்பட்டது. கோட்டார் மார்க்கெட் பகுதியிலும் தடையை மீறி சில கடைகள் திறந்து செயல்பட்டன. அந்த கடைகளையும் மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். இதற்கிடையே தடையை மீறி திறந்த 10-க்கும் அதிகமான கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதேசமயம் வடசேரி காய்கறி சந்தை வியாபாரிகளும், கணேசபுரம் மற்றும் சரலூர் மீன் மார்க்கெட் வியாபாரிகளும் நடைபாதையில் சமூக இடைவெளி விட்டு கடை அமைத்து வியாபாரம் செய்தனர்.

Next Story