நெல்லையில் முழுஊரடங்கு: காலையில் பரபரப்பான சாலைகள் மாலையில் வெறிச்சோடின


நெல்லையில் முழுஊரடங்கு: காலையில் பரபரப்பான  சாலைகள் மாலையில் வெறிச்சோடின
x
தினத்தந்தி 12 May 2021 1:57 AM IST (Updated: 12 May 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் முழு ஊரடங்கால் காலையில் பரபரப்பான சாலைகள், மாலையில் வெறிச்சோடின.

நெல்லை:
தமிகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்தது. நேற்று 2-வது நாளாக பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து இயங்கவில்லை. இதேபோல் வேன், கார், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களும் ஓடவில்லை.

ஆனால் பொதுமக்கள் காலை நேரத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியே வந்தனர். இதனால் நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள்களில் அங்குமிங்கும் சென்று வந்ததால் நெல்லை மாநகர ரோடுகள் காலையில் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் நண்பகல் 12 மணியுடன் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. இதனால் மாலையில் சாலைகள் வெறிச்சோடின.

கொரோனா தொற்றினால் மேலப்பாளையம் உழவர் சந்தை மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் இடம் கொடுக்கப்பட்டது. அங்கு உழவர் சந்தை மேலாண்மை அதிகாரிகள் முன்னிலையில் இடைவெளியுடன் கடைகள் அமைக்கப்பட்டன. மேலும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக நின்று காய்கறிகளை வாங்குவதற்காக மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் மூலம் வட்டம் போடப்பட்டது.

இதேபோல் ஏற்கனவே பாளையங்கோட்டை மார்க்கெட் காய்கறி கடைகள் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அங்குள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்ட மீதமுள்ள கடைகளை கோர்ட்டு எதிரே உள்ள பெல் மைதானத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோதிலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, வெளியே நடமாடும் மக்களை போலீசார் கண்டிப்பதில்லை. ஆனால் பிற்பகலில் வெளியே வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ரோட்டில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களை பிடித்து கொரோனா தாக்கம் குறித்து எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களில் சோதனை நடத்தினர்.

இதேபோல் நெல்லை வண்ணார்பேட்டை, டக்கரம்மாள்புரம், தாழையூத்து, பழையபேட்டை, கருங்குளம், கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம் ஆகிய பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Next Story