நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இருப்பு குறித்து கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்
நாமக்கல்:
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இருப்பு குறித்து கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
முழு ஊரடங்கு
கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை காக்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவார காலம் முழு ஊரடங்கை செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் லாரி தொழில், ஜவுளி தொழில், முட்டை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருவதால், வெளிமாநிலங்களுக்கு தொழிலாளர்கள் அதிகம் சென்றுவரும் சூழ்நிலையிலும், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா நோய்த்தொற்று பிற மாவட்டங்களை விட கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
முழு ஊரடங்கு நேரத்தில் மருத்துவ தேவைகள், அத்தியாவசியமான தேவைகளை தவிர யாரும் வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்தும் அமைச்சர்கள், கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
கலெக்டர் ஆய்வு
அதன் அடிப்படையில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டு உள்ள ஆக்சிஜன் கொள்கலனில் ஆக்சிஜன் இருப்பு குறித்து கலெக்டர் மெகராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து குமாரபாளையம் நகராட்சி பகுதியில் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் செல்வோரிடம் தேவையின்றி வெளியில் சுற்றக் கூடாது என்றும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் கண்ணப்பன், மயக்கவியல் துறை இணை பேராசிரியர் அரவிந்த் குமார், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு மற்றும் டாக்டர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story