காய்ச்சல்-சளி தொல்லை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் குவிந்தனர்


காய்ச்சல்-சளி தொல்லை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 12 May 2021 4:15 AM IST (Updated: 12 May 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

காய்ச்சல்-சளி தொல்லைகளுக்கு சிகிச்சை பெற ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு
காய்ச்சல்-சளி தொல்லைகளுக்கு சிகிச்சை பெற ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் குவிந்தனர்.
அரசு ஆஸ்பத்திரி
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக வந்து செல்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அனைத்து வகை நோய்களுக்கான பிரிவுகளும் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி கொரோனா நோய் சிகிச்சைக்காக தனியாக வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரிசோதனை
இந்தநிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். காய்ச்சல், சளி தொல்லை காரணமாக மருந்து மாத்திரைகள் வாங்க அதிகமானவர்கள் வந்திருந்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக லேசான காய்ச்சல் இருந்தாலே பொதுமக்கள் மிகவும் பயப்படுகிறார்கள். அரசு தரப்பிலும் காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் நேற்று ஏராளமானவர்கள் குவிந்தனர். இவர்களில் சந்தேகத்துக்கு உரிய நோய் பாதிப்பு இருப்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முடிவுகள் வெளிவர தாமதம்
ஈரோட்டில் தனியார் பரிசோதனைக்கூடங்களில் கொரோனா முடிவு 6 மணி நேரத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு அதிக கட்டணமாகிறது. அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆனால் முடிவு வெளிவர 2 முதல் 3 நாட்கள் வரை ஆகிறது. இதனால் பரிசோதனை மேற்கொண்டவர்கள் பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளை விரைவாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Next Story