அ.தி.மு.க.வினர் 6 பேர் மீது வழக்கு


அ.தி.மு.க.வினர் 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 May 2021 4:35 AM IST (Updated: 12 May 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் அவதூறாக பேசியதாக அ.தி.மு.க.வினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காயிதே மில்லத் 1-ம் தெருவை சேர்ந்த அப்துல்ஹக்கீம் மகன் செய்யது இப்ராகிம் என்ற அன்சாரி. தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று மாலை ராமசாமியாபுரம் 2-ம் தெருவில் சென்றபோது, அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.கண்ணன், முதல்-அமைச்சர் மற்றும் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அவர் செல்போனில் படம் பிடித்தபோது கண்ணன் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் செய்யது இப்ராகிமை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அவர் சங்கரன்கோவில் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கட்சியினருடன் சென்றார். அப்போது அங்கு வந்த கண்ணன், பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினைக்காக சென்ற தன்னை 5 பேர் வழிமறித்து கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டினார். இதனால் போலீஸ் நிலையம் முன்பு தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதையடுத்து தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து, முதல்-அமைச்சரை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதையடுத்து செய்யது இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் கண்ணன் உள்பட அ.தி.மு.க.வினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க.வினரும் புகார் அளித்தனர். அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Next Story