3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி
வேடசந்தூரில், பட்டம் விட்டபோது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
வேடசந்தூர்:
9-ம் வகுப்பு மாணவன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தனசேகரன். விவசாயி. அவருடைய மகன் கவின்குமார் (வயது 14). இவன், வேடசந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
கொரோனா பரவல் எதிரொலியாக, தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கவின்குமார், தனது வீட்டு மாடிக்கு சென்று அடிக்கடி பட்டம் விட்டு விளையாடி வந்தான்.
தவறி விழுந்து பலி
அதன்படி நேற்று முன்தினம் மாலை இவன், தனது வீட்டின் 3-வது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று பட்டம் விட்டு கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக 3-வது மாடியில் இருந்து கவின்குமார் திடீரென தவறி விழுந்தான்.
இதில் படுகாயம் அடைந்த கவின்குமார், உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கவின்குமார் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவின்குமார் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டம் விட்டபோது, 3-வது மாடியில் இருந்து பள்ளி மாணவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-----
Related Tags :
Next Story