வீரபாண்டியன்பட்டினத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
வீரபாண்டியன்பட்டினத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
கண்காணிப்பு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டு எழில்நிலவன் மற்றும் ராஜ்பாரத் ஆகியோர் அடங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம், வேளாங்கண்ணி கோவில் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விநாயகமூர்த்தி (45) என்பவர், அவரது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தும், 60 லிட்டர் ஊரல், சாராயம் காய்ச்சுவதற்கான பாத்திரங்கள், அடுப்புகள் மற்றும் இதர தளவாட சாமான்கள் ஆகியவற்றை அழித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவரை கைது செய்து, அவரிடமிருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story