வீட்டில் மதுப்பாட்டில்கள் பதுக்கிய பெண் கைது
கொடைரோடு அருகே வீட்டில் மதுப்பாட்டில்கள் பதுக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
கொடைரோடு:
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபாட்டில்களை முன்கூட்டியே மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கொடைரோடு அருகே பள்ளபட்டி தேவர்நகர் பகுதியில், ஒரு வீட்டில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது பெட்டி, பெட்டியாக மதுப்பாட்டில்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்து 1,355 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆகும்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் மனைவி ஆனந்த ஜோதி (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story