அத்தியாவசிய பொருட்கள் வாங்க பல கிமீ தூரம் நடந்து செல்லும் ஆதிவாசி மக்கள்


அத்தியாவசிய பொருட்கள் வாங்க பல கிமீ தூரம் நடந்து செல்லும் ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 12 May 2021 8:05 PM IST (Updated: 12 May 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் கூடலூர் பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஆதிவாசி மக்கள் பல கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கூடலூர்

முழு ஊரடங்கால் கூடலூர் பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஆதிவாசி மக்கள் பல கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று 3-வது நாளாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது.  நீலகிரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் ஆதிவாசி மக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார் கள். தற்போது முழு ஊரடங்கால் வேலைவாய்ப்பு இன்றி கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

நடந்து செல்லும் ஆதிவாசிகள்  

முழு ஊரடங்கு அமல்படுத்தி 3 நாட்கள் ஆகிவிட்டதால் தேவையான பொருட்களை வாங்க ஆதிவாசி மக்கள் கிராமங்களில் இருந்து முக்கிய பஜார்களுக்கு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. 

ஆனால் அவர்கள் வருவதற்கு ஏற்ப போக்குவரத்து வசதி கிடையாது. இதனால் பல கி.மீ. தூரம் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை ஆதிவாசி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே சுமந்தவாறு வீடுகளுக்கு சென்றனர். 

கூடலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஓவேலி, ஸ்ரீமதுரை, முதுமலை, மரப்பாலம், புளியாம்பாரா உள்பட பல இடங்களில் வசிக்கும் ஆதிவாசி மற்றும் கிராமப்புற மக்கள் கூடலூர் நகருக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன வசதி இல்லாததால் பல கி.மீ. தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

நடமாடும் கடைகள்

இதுகுறித்து ஆதிவாசி மற்றும் கிராமப்புற மக்கள் கூறும்போது, முழு ஊரடங்கு அறிவிப்பால் வாகனங்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

எனவே நடமாடும் காய்கறி, மளிகை கடைகளை கிராமப்புறங்களில் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 


Next Story