திருபுவனை அருகே கலால் துறை அதிரடி மினிலாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தல் 700 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்


திருபுவனை அருகே கலால் துறை அதிரடி மினிலாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தல் 700 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2021 8:10 PM IST (Updated: 12 May 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே ரகசிய அறை அமைத்து எரிசாராயம் கடத்திய மினி லாரியை கலால் துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

திருபுவனை, 

திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் மினி லாரி ஒன்று மர்மமான முறையில் 3 நாட்களாக நின்றது. இதுபற்றி அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கலால்துறை தாசில்தார் மணிகண்டன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பொன்னுசாமி, பிரேம்பிரகாஷ் மற்றும் கலால் போலீசார் வசந்தகுமார், குமரன், பிரகாஷ், விஜயன் ஆகியோர் கலித்தீர்த்தாள்குப்பம் கிராமத்துக்கு சென்று, அந்த மினி லாரியை சோதனை செய்தனர்.

அப்போது மினி லாரியின் கட்டமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. இது கலால்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் லாரியின் பின்பகுதியில் சோதனை செய்தபோது, ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 வெள்ளைநிற பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4.20 லட்சம் ஆகும். கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மினி லாரியில் ரகசிய அறை அமைத்து எரிசாராயம் கடத்தியது குறித்து கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டியார்பாளையம், கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியில் பண்ணை மற்றும் மாட்டுக்கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story