முழு ஊரடங்கால் முடங்கியது, புதுச்சேரி பகல் 12 மணிக்கு மேல் சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி முற்றிலும் முடங்கியது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பலி எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் பயன்தரவில்லை.
இதைத்தொடர்ந்து முழுமையான ஊரடங்கினை அமல்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ஊரடங்கு காரணமாக நேற்று அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, பழக்கடைகள், இறைச்சி, மீன்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. அவையும் நண்பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது. மருந்து கடைகள், பாலகங்கள் வழக்கம்போல் இயங்க அனுமதிக்கப்பட்டன.
அதேநேரத்தில் மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள், டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. அவசர தேவைக்காக மட்டும் ஆட்டோக்கள் ஓடின.
நகரப்பகுதியில் முக்கிய வீதிகளில் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோரை மட்டும் அவர்கள் அனுமதித்தனர். மற்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
சிலருக்கு அபராதம் விதித்தனர். ஊரடங்கு காரணமாக சிலர் 12 மணிக்கு முன்பாகவே கடைகளை அடைத்துவிட்டு அவசரம் அவசரமாக வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
பகல் 12 மணிக்கு பிறகு தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. முழுஅடைப்பு போல் கடைவீதிகள் எல்லாம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளித்தன.
புதுவை எல்லைப்பகுதிகளும் மூடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை மட்டும் அவர்கள் அனுமதித்தனர். அதேபோல் அத்தியாவசிய சேவை பணிகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வெளியூர்களில் இருந்து வருபவர்களை மட்டும் புதுச்சேரிக்குள் அனுமதித்தனர்.
இந்த முழுஊரடங்கு காரணமாக அன்றாடம் வேலைக்கு வெளியூர்களுக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் பல்வேறு சாலையில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர். அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று இரவு ராஜீவ்காந்தி சிலை அருகில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என விசாரணை நடத்தினார். தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் வாகனத்தில் வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story