கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 12 May 2021 4:44 PM GMT (Updated: 12 May 2021 4:44 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலிந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நலிந்த நிலையில் உள்ள தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2019-2020-ம் ஆண்டுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
உதவித்தொகை பெற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கு பெற்றிருக்க வேண்டும். தேசியஅளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையேயான, அகில இந்திய பல்கலை கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போன்றவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

மாத வருமானம்

இளம் வயதில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டிகள் ஏப்ரல் 2021-ந் தேதி அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.வருமான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது. 

கடைசிநாள்

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மூலமாக வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை 74017 03485 என்ற செல்போன் எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக்தை தொடர்பு கொள்ளலாம்.

Next Story