3 குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை குடும்பத்தினரால் கடன் தொல்லையில் சிக்கியதாக உருக்கமான கடிதம்


3 குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை குடும்பத்தினரால் கடன் தொல்லையில் சிக்கியதாக உருக்கமான கடிதம்
x

உசிலம்பட்டியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நகைப்பட்டறை அதிபர் தனது மனைவியுடன் தற்கொலை செய்துெகாண்டார்.

உசிலம்பட்டி, 

அவர் எழுதிய கடிதத்தில், தனது குடும்பத்தினரால் கடன் தொல்லையில் சிக்கியதாக அவர் உருக்கமுடன் தெரிவித்து உள்ளார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவருடைய மனைவி விஜி என்ற ஸ்ரீநிதி பூங்கோதை. இவர்களுடைய மகள்கள் மகாலட்சுமி (11), அபிராமி (5). மகன் அமுதன் (5). இதில் அபிராமியும், அமுதனும் இரட்டைக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் உசிலம்பட்டி நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் சரவணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அதோடு அவர் கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் சமீப காலமாக பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் சரவணன் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் சரவணனின் மனைவி விஜி நேற்று காலை வழக்கம் போல் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டார். பின்னர் சற்று நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டார். அதன்பின்னர் உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை.

நீண்ட நேரமாக வீடு பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சரவணன், அவருடைய மனைவி விஜி, மகள்கள் மகாலட்சுமி, அபிராமி, மற்றும் மகன் அமுதன் (5) ஆகிய 5 பேரும் அடுத்தடுத்து பிணமாக கிடந்தனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.

உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

5 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் ெதால்லையால் 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து அவர்களை கொன்றுவிட்டு, தாங்களும் விஷம் குடித்து சரவணனும், அவருடைய மனைவி விஜியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சரவணன் எழுதி வைத்திருந்தாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

அந்த கடிதத்தில், “என்னை எனது குடும்பத்தினர் கடனாளியாக ஆக்கிவிட்டனர். ஒரு ரூபாய் கூட பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் ஒதுக்க முடியாமல் செய்துவிட்டனர். அதனால் இந்த முடிவை எடுக்கிறேன். எனக்கு வர வேண்டிய சொத்துக்களை விற்று கடனை அடைத்துவிடுங்கள்” என்று சரவணன் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும் போது, “காலையில் இரட்டை குழந்தைகளான அமுதனும், அபிராமியும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். அதன் பின்புதான் சரவணன், விஜி சேர்ந்து இந்த துயர முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் இப்படி ஒரு முடிைவ தேடிக்கொள்வார்கள் என நாங்கள் ஒரு போதும் நினைக்கவில்லை. வீட்டுக்குள் 5 பேரும் பிணமாக கிடந்த காட்சி மிகுந்த சோகத்தை ஏற்படுத்திவிட்டது” என வருத்தத்துடன் கூறினார்கள்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகைப்பட்டறை அதிபர் சரவணன் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவுதான் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் ஊருக்கு வரும் போது அணிந்திருந்த ஆடைகளுடன் அப்படியே அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று காலையிலும் சரவணனின் குழந்தைகள் அதே ஆடையுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்பின்னரே சரவணன் இந்த துயர முடிவை எடுத்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் வீடு பூட்டப்பட்டதால் அப்பாவி குழந்தைகள் ஒவ்வொன்றாக வீட்டின் உள்ளேயே இறந்துகிடந்தனர். இந்த காட்சி அனைவரையும் கண் கலங்க செய்துவிட்டது.

Next Story