விசைப்படகு மராமத்து பணி நிறுத்திவைப்பு
முழு ஊரடங்கால் விசைப்படகு மராமத்து பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பனைக்குளம்,
முழு ஊரடங்கால் விசைப்படகு மராமத்து பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தடை
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலும் மீன்கள் இனப்பெருக்க கால சீசன் காலமாக உள்ளதால் இந்த 2 மாதங்கள் மட்டும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல் இந்த ஆண்டின் மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்கியது. தடை காலம் தொடங்கியதால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தொண்டி, ஏர்வாடி, ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் 61 நாள் மீன்பிடி தடை காலம் தொடங்கி ஒரு மாதம் முடிவடைய உள்ளது. தடைகாலம் நடந்து வருவதால் மண்டபம் பகுதியில் மீனவர்கள் தங்களது படகுகளை மராமத்து பணிகள் செய்ய வடக்கு கடற்கரையில் வரிசையாக ஏற்றி வைத்து உள்ளனர்.
நிறுத்தி வைப்பு
ஆனால் முழு ஊரடங்கு காரணமாக படகுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளதாலும், பஸ் உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வரமுடியாத சூழ்நிலை யாலும் படகுகளை சீரமைப்புப் பணிகள் நடைபெறாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது.
இதேபோல் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள் மராமத்து பணிகள் செய்வதற்காக கடற்கரையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி தடை காலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளும் மீனவர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அதுபோல் 61 நாள் மீன்பிடி தடை காலம் அடுத்தமாதம் ஜூன் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story