சேந்தமங்கலம் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வங்கி மேலாளர் பலி - கொரோனா பரிசோதனைக்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்


சேந்தமங்கலம் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வங்கி மேலாளர் பலி - கொரோனா பரிசோதனைக்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 12 May 2021 11:26 PM IST (Updated: 12 May 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே கொரோனா பரிசோதனைக்கு சென்று திரும்பியபோது புளியமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் வங்கி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் கொரோனா நோய் தாக்கம் இருக்குமோ? என்று சந்தேகம் அடைந்தார். 

இதையொட்டி அவர் நேற்று சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக சென்றார். அங்கு தமிழ்ச்செல்வன் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பின்பு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியில் சாலையோரத்தில் நின்ற புளியமரத்தில் தமிழ்ச்செல்வன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி சவுமியா (31) அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

இதையடுத்து அவர் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான தமிழ்ச்செல்வனுக்கு தன்வந்த் (4), சுஜன் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி மேலாளர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story