நாய் கடித்து கட்டிட தொழிலாளி சாவு
பெங்களூருவில் நாயை பிடிக்க முயன்றபோது, அந்த நாய் கடித்ததில் கட்டிட தொழிலாளி உயிர் இழந்தார். இதுதொடர்பாக தமிழக மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:
தமிழக மாணவி
பெங்களூரு எலகங்கா நியூடவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அட்டூர் லே-அவுட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் கிருஷி (வயது 23). அவர், பெங்களூருவில் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனர் படித்து வருகிறார். மாணவி கிருஷிக்்கு சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும்.
கிருஷி தன்னுடைய வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அந்த நாய்க்கு அவர் சாப்பாடு கொடுக்க முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்து நாய் வெளியே ஓடிவிட்டது. அந்த நாயை பிடிக்க கிருஷி ரோட்டில் அங்கும், இங்குமாக ஓடிக் கொண்டிருந்தார். கிருஷி வசிக்கும் வீட்டின் அருகே புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
அங்கு கட்டிட தொழிலாளியாக ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த நரசிம்மா (36) என்பவர் வேலை செய்து வந்தார். கிருஷி நாயை பிடிக்க முடியாமல் கஷ்டப்படுவதை பார்த்த நரசிம்மா அந்த நாயை பிடித்து கொடுக்க முயன்றார்.
தொழிலாளியை நாய் கடித்தது
அப்போது, எதிர்பாராமல் அந்த நாய் நரசிம்மா கழுத்தில் பலமுறை கடித்து குதறியது. இதில், அவர் பலத்தகாயம் அடைந்தார். ஊரடங்கு காரணமாக அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததாலும், நரசிம்மாவுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததாலும், உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிலையில், நரசிம்மா உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி சக தொழிலாளா்கள் அவரை எலகங்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு நரசிம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். அவரது கழுத்தில் நாய் பலமாக கடித்திருந்தாலும், அதற்கான உடனடியாக சிகிச்சை பெறாமல் தாமதமாக ஆஸ்பத்திரிக்கு சென்றதாலும் நரசிம்மா உயிர் இழக்க நேரிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எலகங்கா நியூடவுன் போலீசார், மாணவி கிருஷி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாய் கடித்து தொழிலாளி பலியான சம்பவம் எலகங்காவில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story