முழு ஊரடங்கை மீறிய 3,086 பேருக்கு அபராதம்
விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களில் முழு ஊரடங்கை மீறிய 3,086 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையொட்டி அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் அவ்வாறு வருபவர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும்படியும், அத்தியாவசிய பொருளை வாங்கச்செல்கிறோம் என்று கூறி தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் முழு ஊரடங்கை மீறி தேவையின்றி சாலைகளில் யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்துள்ளனரா, சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்செல்கின்றனரா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டுப்பாடுகளை மீறியும், அத்தியாவசிய தேவையின்றியும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததாக முதல் நாளான கடந்த 10-ந் தேதியன்று 1,458 பேர் மீதும், 2-ம் நாளான நேற்று முன்தினம் 1,318 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை என மொத்தம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 200-ஐ அபராதமாக விதித்தனர்.
முக கவசம்
மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாமல் இருந்த 309 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.30,900-மும், சமூக இடைவெளியை பின்பற்றாத ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்றும், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story