சேலத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு கொரோனா நோயாளிகள் பரிதவிப்பு
சேலத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் பரிதவித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் பரிதவித்து வருகிறார்கள்.
2-வது அலை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சேலம் மாவட்டத்தில் தினமும் 400 முதல் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதாவது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 5 பெண்கள் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.
பரிதவிக்கும் நோயாளிகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் இந்த படுக்கைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இதுதவிர ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாநகரில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லுமாறு அவர்களது உறவினர்களை தனியார் மருத்துவமனைகள் நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனா நோயாளிகள் பரிதவித்து வருகிறார்கள்.
மூச்சுத்திணறல்
மேட்டூர் மற்றும் ஓமலூர் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் திணறி வருகிறார்கள். குறிப்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை கேட்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்த வண்ணமாக உள்ளனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் அவரது உறவினர்கள் பரிதவித்து வருவதை காணமுடிகிறது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவரது உயிரை காப்பாற்றக்கூடிய கருவியாக ஆக்சிஜன் திகழ்கிறது. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டீன் விளக்கம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மட்டுமின்றி தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதிகளுடன் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இது குறித்து டீன் முருகேசன் கூறியதாவது:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 950 படுக்கை வசதிகள் செய்யப்பட்டன. இதில் 800 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. தற்போது அனைத்து படுக்கையிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைக்கு அரசு ஆஸ்பத்திரியில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி இல்லை. பல்வேறு இடங்களிலிருந்தும் தொற்று பாதித்த பலர் இங்கு வருகின்றனர். நோயாளிகள் வருகைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் செய்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். நேற்று 600 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story