ஈரோடு மாநகர் பகுதியில் குடும்பத்தினர் அனைவருக்கும் பரவும் கொரோனா தொற்று


ஈரோடு மாநகர் பகுதியில் குடும்பத்தினர் அனைவருக்கும் பரவும்  கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 May 2021 9:16 PM GMT (Updated: 12 May 2021 9:16 PM GMT)

ஈரோடு மாநகர் பகுதியில் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியில் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
புதிய உச்சம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவேகமாக பரவி வருகிறது. மாநகராட்சி பகுதியை போலவே மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் ்பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதிய உச்சமாக 925 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மாநகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைத்து நபர்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது.
கொரோனா தொற்று
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மட்டும் 302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பு தெருவுக்கு ஒருவர், வீட்டுக்கு ஒருவர் என தொற்று ஏற்பட்டு வந்தது. தற்போது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று பரவி வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி திருமண மண்டபத்தில் செயல்படும் ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்து சென்று, சிடி ஸ்கேன், ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் போன்ற சோதனை செய்யப்பட்டு, நோயின் தன்மை துல்லியமாக கண்டறியப்படுகிறது.
பரிசோதனை
இந்த 2 மையங்களிலும் தினமும் 250 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நோயின் பாதிப்பிற்கு தகுந்தாற்போல மருத்துவமனைகளிலோ, தற்காலிக சிகிச்சை மையங்களிலோ சிகிச்சைக்கு பரிந்துரைக்கிறோம். பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மாநகர் பகுதியில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், கொரோனா தொற்றை கண்டறிய தினமும் 1,300 பேருக்கு மேல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story