நெல்லையில் பழக்கடை, நாட்டு மருந்து கடைகள் திறப்பு
நெல்லையில் பழக்கடை, நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின்போது காய்கறி, மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மருந்து கடைகள், பால் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர ஓட்டல், டீக்கடைகளில் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டது.
இதேபோல் நாட்டு மருந்து கடைகள் மற்றும் பழக்கடைகளையும் திறக்க வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி தமிழக அரசு பழக்கடைகளையும், நாட்டு மருந்து கடைகளையும் திறப்பதற்கு அனுமதி அளித்தது. இதையொட்டி நெல்லை மாநகரில் நேற்று அனைத்து பழக்கடைகளும் திறக்கப்பட்டன. நெல்லை சந்திப்பு, கண்ணம்மன் கோவில் தெரு, டவுன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பழக்கடைகள் திறக்கப்பட்டு, நண்பகல் 12 மணி வரை வியாபாரம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்த மக்கள் திறந்திருந்த பழக்கடைகளில் தங்களுக்கு தேவையான பழங்களை வாங்கிச்சென்றனர்.
இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஒருசில இடங்களில் சிறிய அளவிலான பழக்கடைகள் காலை நேரத்தில் திறந்து வியாபாரம் நடைபெற்றது. தற்போது தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கையாக விளையக்கூடிய பழங்களை பருவம் தவறாமல் பறித்து விற்பனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பழங்கள் அழுகி வீணாகி விடும். எனவே அது பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையிலும், வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படாமலும் விற்பனை செய்ய அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர்.
கொரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு தடையின்றி மருந்து மாத்திரைகள் கிடைக்க ஆங்கில மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்க அரசு அனுமதி அளித்தது. அதேபோல் பலர் சித்த மருந்து, யுனானி மருந்து உள்ளிட்டவையை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே நாட்டு மருந்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையொட்டி நேற்று நெல்லையில் பல்வேறு இடங்களில் உள்ள நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அங்கு சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட நாட்டு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story