பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் 700 டன் காய்கறிகள் தேக்கம்


பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் 700 டன் காய்கறிகள் தேக்கம்
x
தினத்தந்தி 13 May 2021 4:34 AM IST (Updated: 13 May 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் 700 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதையடுத்து வருகிற 15-ந் தேதி முதல் மார்க்கெட்டை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவுக்கும் அதிகளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக இந்த மார்க்கெட்டில் மாலை வரை காய்கறிகள் ஏலம் விடப்பட்டு, அதன் பிறகு கேரளா மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

ஆனால் மதியம் 12 மணிக்குள் மார்க்கெட்டை மூட வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதற்குள் விவசாயிகள் பொருட்களை எடுத்து வர சிரமப்படுவதுடன், வெளியில் அனுப்ப முடியாததால் காய்கறிகளை தேக்கம் அடைந்து கிடக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 700 டன் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்து கிடக்கிறது. காய்கறிகள் விலை பாதிக்குமேல் குறைந்துள்ளது. ஆனால் வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் வராமல் காய்கறிகள் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இன்று (வியாழன்), நாளை (வெள்ளிக்கிழமை) மட்டும் மார்க்கெட் இயங்கும் என்றும், 15-ந் தேதி (சனிக்கிழமை) முதல் மார்க்கெட் மூடப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் செயலாளர் நாராயண சிங்கம், முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், அருணோதயம், முருகேசன் உள்பட காய்கறி மார்க்கெட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story