சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் தயார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மணலி மஞ்சம்பாக்கம், கொசப்பூர் பிரதான சாலையில் உள்ள சமுதாய நல ஆஸ்பத்திரியில் அமைக்கப்படவுள்ள 90 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம், புழலில் உள்ள 100 படுக்கை வசதியுடன் கூடிய நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரி, மாதவரம் சூரப்பேட்டையில் உள்ள வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா பாதுகாப்பு மையம் ஆகியவற்றில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தொடர் முயற்சி மற்றும் கோரிக்கையினை ஏற்று மணலி மஞ்சம்பாக்கம், கொசப்பூர் பிரதான சாலையில் உள்ள சமுதாய நல ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மொத்தம் உள்ள 90 படுக்கைகளில் 46 படுக்கைகளுக்கு ‘டி’ வகை ஆக்சிஜன் உருளைகளை பயன்படுத்தி ஆக்சிஜன் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
606 படுக்கைகள்
மேலும் 44 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குளியல் வசதியுடன் உள்ள கழிப்பறை, மின்சாரம் தடைபடாமல் இருக்க ஜெனரேட்டர், அனைத்து மருத்துவ அலுவலர்களுக்கு தேவையான ஆய்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட உடன் இந்த கொரோனா சிகிச்சை மையம் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்.
வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 606 படுக்கைகள் உள்ளன. இதில் தற்போது வரை 327 நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை வர்த்தக மையம்
இந்த மையத்தில் ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய 86 படுக்கைகளை அமைக்கவும், 95 படுக்கைகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை வர்த்தக மையத்தில் 860 ஆக்சிஜன் படுக்கைகளில் தற்போது 360 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை கமிஷனர் பி.ஆகாஷ், மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story