பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் விபரீதம் 8 வயது தம்பி கோடரியால் வெட்டிக்கொலை 10 வயது அண்ணன் கைது


பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் விபரீதம் 8 வயது தம்பி கோடரியால் வெட்டிக்கொலை 10 வயது அண்ணன் கைது
x
தினத்தந்தி 13 May 2021 7:23 PM IST (Updated: 13 May 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் அதிக பாசம் காட்டிய 8 வயது தம்பியை அவரது 10 வயது அண்ணணே கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு.

புனே, 

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அருகில் உள்ள கர்நாடகாவில் விவசாய கூலியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகன் மீது தான் பெற்றோர் அதிக பாசம் வைத்துள்ளதாக கருதிய மூத்த சகோதரனுக்கு அவன் மீது கோபம் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுவர்களை வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர் நய்காவ் கிராமத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த 8 வயது சிறுவன் அழுதபடி பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக அண்ணனிடம் கூறி உள்ளான். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய அண்ணன், தம்பியை அங்கிருந்த கோடரியால் தாக்கினான்.

இதில் அவனது கழுத்தில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தான். இதைதொடர்ந்து அவனது அண்ணன் கோடரியை தூக்கி எரிந்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தம்பியை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டான்.

இதனால் அதிக ரத்த போக்கு காரணமாக 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது இளைய மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி கொலை செய்த 10 வயது சிறுவனை கைது செய்தனர்.

அவனை அருகில் உள்ள சிறுவர் காப்பகத்தில் போலீசார் அடைத்தனர்.

Next Story