கடலூரில் திருடுபோன மோட்டார் சைக்கிள் வேடசந்தூரில் சிக்கியது
கடலூரில் திருடுபோன மோட்டார் சைக்கிள் வேடசந்தூரில் நிற்காமல் அதிவேகமாக சென்ற போது அபராதம் விதித்ததால் துப்புதுலங்கப்பட்டு சிக்கியது.
திண்டுக்கல்:
அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று முன்தினம் மதியம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தார்.
அதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், மோட்டார் சைக்கிளை மறித்தார்.
ஆனால், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று விட்டார். எனினும், மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை சப்-இன்ஸ்பெக்டர் குறித்து கொண்டார்.
பின்னர் அதிவேகமாக சென்றதற்காக ரூ.1,600 அபராதம் விதித்தார்.
இதுதொடர்பாக வாகனத்தின் உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் சென்றது.
திருடு போனது
ஆனால், அபராதம் விதித்தது தொடர்பாக மாலை வரை போலீசாரிடம் யாரும் கேட்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளின் பதிவுஎண்ணை கொண்டு விசாரித்தனர்.
அதில் கடலூரை சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
எதிர்முனையில் இருந்து பேசியவர், கடலூரில் இருந்து பேசுவதாக கூறினார்.
மேலும் தனது மோட்டார் சைக்கிள் 2 மாதங்களுக்கு முன்பு திருடு போய்விட்டது.
ஆனால், திண்டுக்கல் போலீசார் அபராதம் விதித்துள்ளதாக தனக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
எனவே, திருடு போன மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தரும்படி முறையிட்டார்.
சிக்கியது
இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அதேபோல் வேடசந்தூர் முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் விசாரித்ததில் நண்பரின் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.
இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது குறைந்த விலைக்கு மற்றொரு நபரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கியதாக அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் 3 நபர்கள் மாறிமாறி விற்பனை செய்ததில், இறுதியாக வேடசந்தூர் வாலிபர் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அதை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேநேரம் வாகன சோதனையில் அதிவேகமாக நிற்காமல் சென்றாலும் போலீசார் தங்களுடைய கடமையை செய்ததால், கடலூரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் வேடசந்தூரில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலை, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டினார்.
Related Tags :
Next Story