பெங்களூருவில் கொரோனா தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசை தேதி ஒதுக்கீடு செய்த பிறகும் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
பெங்களூருவில் கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். தேதி ஒதுக்கீடு பெற்ற பிறகும் தடுப்பூசி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. ஆனால் வைரஸ் தொற்று பரவலில் மராட்டியத்தை பின்னுக்கு தள்ளி கர்நாடகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே போல் உயிரிழப்பிலும் கர்நாடகம் முதல் இடத்தில் இருக்கிறது.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பை கண்டு மாநில அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா சுனாமியை போல் தாக்கி வருகிறது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவுக்கு 2 மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பரவல் என்பது சற்று குறைய தொடங்கியுள்ளது.
கர்நாடகத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அந்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசு கர்நாடகத்திற்கு தடுப்பூசி வந்துள்ளதால், 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழு அளவில் தொடங்கப்படுவதாக அறிவித்தது.
ஆன்லைன் பதிவு செய்து, தேதி ஒதுக்கப்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசியை போட்டுக்கெள்ள வேண்டும் என்று அரசு கூறியது. அவ்வாறு தேதி ஒதுக்கீடு பெற்றவர்கள், பெங்களூருவில் தடுப்பூசி மையங்கள் முன்பு குவிந்தனர். ஆனால் பெரும்பாலான மையங்களில் தலா 50 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும், அவற்றுக்கு டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தனர்.
இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனாலும் தடுப்பூசி இருப்பு இல்லை என்று அறிவித்தனர். அதனால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒருபுறம், ஆன்லைன் பதிவு செய்து தேதி ஒதுக்கீடு பெற்றவர்கள் வந்து தடுப்பசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசே சொல்கிறது.
மற்றொருபுறம் தேதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அவர்களில் 50 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையான அளவில் தடுப்பூசி கிடைக்க இன்னும் 2 வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கிறார்கள். கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிவேகமாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
Related Tags :
Next Story