வீடுகளுக்கே சென்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் வினியோகிக்கும் திட்டம் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தொடங்கி வைத்தார்


வீடுகளுக்கே சென்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் வினியோகிக்கும் திட்டம் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 May 2021 8:39 PM IST (Updated: 13 May 2021 8:39 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் வினியோகம் செய்யும் திட்டத்தை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தொடங்கி வைத்தார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கொரோவால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆக்சிஜன் குறைந்து மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். அத்தகைய கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி பெங்களூருவில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ‘ஓலா’ வாடகை கார்கள் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களின் வீட்டிற்கே சென்று ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த உபகரணம் தேவைப்படுபவர்கள் போன் செய்தால், 30 நிமிடங்களில் அவர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று வழங்கப்படும்.

முதல் கட்டமாக இந்த திட்டத்தை மல்லேசுவரம், கோரமங்களாவில் அமல்படுத்தியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் இந்த திட்டத்தை நகரம் முழுவதும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செறிவூட்டல் உபகரணங்களை ஓலா நிறுவனம் தனது கார்கள் மூலம் வினியோகம் செய்யும். உபகரணம் தேவைப்படுவோரிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

ஆக்சிஜன் பிரச்சினை தீர்ந்த பிறகு அவர்களிடம் இருந்து செறிவூட்டல் உபகரணத்தை பெற்று மற்றவர்களுக்கு வழங்கப்படும்.

உடலில் 94 சசதவீதத்திற்கு கீழ் உள்ளோருக்கு மட்டுமே இந்த ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்கள் வழங்கப்படும். முதல்கட்டமாக இந்த திட்டத்திற்கு 500 செறிவூட்டல் உபகரணங்களை ஒதுக்கியுள்ளோம். வரும் நாட்களில் இதன் எண்ணிக்கையை அதிகரிப்போம்.

இந்த செறிவூட்டல் உபகரணம் தேவைப்படுவோர், ‘ஓலா’ செயலிக்குள் சென்று, பதிவு செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விவரங்களை வழங்க வேண்டும். அதன் பிறகு ‘ஓலா’ வாடகை கார் மூலம் செறிவூட்டல் உபகரணம் 30 நிமிடங்களில் வந்து சேரும்.

இந்த உபகரணத்தை பெறும் நோயாளிகள் முன்பணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இந்த முன்பணம், அந்த உபகரணத்தை திருப்பி செலுத்தும்போது வழங்கப்பட்டு விடும். இதற்கான அனைத்து சேவையும் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story