4 ஊழியர்களை தொடர்ந்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.


4 ஊழியர்களை தொடர்ந்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
x
தினத்தந்தி 13 May 2021 10:10 PM IST (Updated: 13 May 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு கொரோனா

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல் காவல்துறை சார்பிலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருவதோடு ஊரடங்கை மீறி சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் சரகத்திற்குட்பட்ட கடலூர் மாவட்டத்தில் 800 போலீசாரும், விழுப்புரம் மாவட்டத்தில் 700 போலீசாரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 500 போலீசாரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அவ்வப்போது போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி போலீஸ் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

போலீஸ் டி.ஐ.ஜி.க்கு கொரோனா

இந்த நிலையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி வரும் முகாம் எழுத்தர் உள்பட 4 ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. பாண்டியன், நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். இதன் மருத்துவ பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்றது. இதில் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கலக்கம்

ஆனால் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்தவொரு அறிகுறிகளும் இல்லாததால் சுகாதாரத்துறையினரின் அறிவுரைப்படி அவர், தனது முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். டி.ஐ.ஜி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்ததும் அவருடன் அலுவலக பணியிலும், கொரோனா தடுப்பு பணியிலும் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் டி.ஐ.ஜி.யுடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் ஒருவித கலக்கத்துடனேயே இருந்து வருகின்றனர்.

Next Story