போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்; வாலிபர் கைது


போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 May 2021 10:15 PM IST (Updated: 13 May 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ் வாலிபர் கைது

பெங்களூரு:

பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாலிபர் கைது

பெங்களூரு அக்கிபேட்டையில் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் போலியாக தயாரித்து வழங்கப்படுவதாக உப்பார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கி பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த  கடையில் இருந்த ஒரு வாலிபரை கைது செய்து உப்பார்பேட்டை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், அக்கிபேட்டையை சேர்ந்த சம்பத்லால் (வயது 34) என்று தெரிந்தது. இவர், ரெயில் மற்றும் விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி, தற்போது கொரோனா சந்தர்ப்பத்திலும் சம்பத்லாலிடம் ரெயில், விமான டிக்கெட்டுகள் எடுத்து கொடுக்கும்படி பயணிகள் கேட்டுள்ளனர்.

போலி கொரோனா சான்றிதழ்

கொரோனா காரணமாக சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை அறிக்கை கேட்பதால், தான் டிக்கெட் எடுத்து கொடுக்கும் பயணிகளுக்கு எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல், அவா்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனக்கூறி, போலி சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளார். 

இதற்காக சில டாக்டர்களின் போலி முத்திரைகளையும் அவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. பெரும்பாலும் ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தை சேர்ந்த பயணிகளுக்கு அதிக அளவில் போலி கொரோனா சான்றிதழ்களை சம்பத்லால் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.

இந்த போலி சான்றிதழ் வழங்க ஒரு பயணிடம் இருந்து ரூ.4 ஆயிரம் வரை பெற்றதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 4 போலி சான்றிதழ்கள், பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர், எந்தந்த பயணிகளுக்கு எல்லாம் போலி சான்றிதழ் வழங்கினாரோ?, அந்த பயணிகள் தற்போது வசிக்கும் மாநில போலீசாருக்கு உப்பார்பேட்டை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைதான சம்பத்லால் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story