பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளி கிழங்கு பயிரை பாதுகாப்பது எப்படி?
பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளி கிழங்கு பயிரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சோழபாண்டிபுரம், செங்கணங்கொல்லை, திம்மச்சூர், மிலாரிப்பட்டு, அருதங்குடி, மாடாம்பூண்டி, எடையூர், அரும்பாக்கம், கீழதாழனூர், வடமருதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் இலை பேன், செம்பேன் மற்றும் மாவுப்பூச்சி தாக்குதலால் மரவள்ளி கிழங்கு பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், அவர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து திருக்கோவிலூர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மரவள்ளி கிழங்கு பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும. அதன்படி பூச்சி தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும்.
கட்டுப்படுத்தலாம்
இதன் மூலம் பூச்சிகள் அதிகம் பரவாமல் தடுக்க முடியும். பூச்சி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தான அசாடிராக்டினை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி அளவு கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிரில் தெளிக்க வேண்டும். 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தையோ மீத்தோக்சம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5 என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். அல்லது அபமெக்டின் என்கிற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story