ஆஸ்பத்திரி வாசலில் பெண் கொரோனா நோயாளி சாவு


ஆஸ்பத்திரி வாசலில் பெண் கொரோனா நோயாளி சாவு
x
தினத்தந்தி 13 May 2021 10:25 PM IST (Updated: 13 May 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

படுக்கை இல்லை என்று கூறி ஊழியர்கள் கதவை பூட்டியதால், ஆஸ்பத்திரி வாசலிலேயே பெண் கொரோனா நோயாளி உயிரிழந்த பரபரப்பு சம்பவம் சாம்ராஜ்நகர் அருகே நடந்து உள்ளது.

கொள்ளேகால:

படுக்கை இல்லை என்று கூறி ஊழியர்கள் கதவை பூட்டியதால், ஆஸ்பத்திரி வாசலிலேயே பெண் கொரோனா நோயாளி உயிரிழந்த பரபரப்பு சம்பவம் சாம்ராஜ்நகர் அருகே நடந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு 

சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கடந்த 3-ந் தேதி 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து மேலும் 6 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் சாம்ராஜ்நகர் அருகே ஆஸ்பத்திரி வாசலில் பெண் கொரோனா நோயாளி இறந்த சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுனில் வசித்து வந்தவர் நாகம்மா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் குண்டலுபேட்டை தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 

ஆனால் அவருக்கு லேசான அறிகுறி இருந்ததால் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறும்படி கூறி டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் நாகம்மா வீட்டு தனிமையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். 

ஆஸ்பத்திரி வாசலில் சாவு 

இந்த நிலையில் நேற்று காலை நாகம்மாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகமானது. இதனால் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குண்டலுபேட்டை தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் படுக்கை இல்லை என்று கூறி நாகம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததாக தெரிகிறது. 

ஆனால் நாகம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி ஊழியர்களிடம், உறவினர்கள் மன்றாடி கேட்டு கொண்டனர். ஆனால் இதற்கு மறுத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஆஸ்பத்திரியின் வாசல் கதவை இழுத்து பூட்டியதாக தெரிகிறது. 

இதன்காரணமாக சிகிச்சை கிடைக்காமல் ஆஸ்பத்திரி வாசலிலேயே நாகம்மா பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகம்மாவின் உறவினரான கிரீஷ் என்பவர் ஆஸ்பத்திரியின் முன்பு இருந்த பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடினார். 

உறவினர் கைது 

இதுபற்றி அறிந்த குண்டலுபேட்டை டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று கிரீசை கைது செய்தனர். கைதான கிரீஷ் மீது குண்டலுபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதற்கிடையே கொரோனாவுக்கு இறந்த நாகம்மாவின் உடலை சுகாதாரத்துறையினர் எடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்தனர். படுக்கை இல்லை என்று கூறி கதவு பூட்டப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரி வாசலில் பெண் கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவம் சாம்ராஜ்நகரில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story