வேலூர் மண்டித் தெருவில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை
வேலூர் மண்டித் தெருவில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
வேலூர்
ஆலோசனை கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சங்கரன், நகர்நல அலுவலர் சித்ரசேனா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் ஞானவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கும் வகையில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே நேதாஜி மார்க்கெட் காய்கறி, பூ கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது அதில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் முடிவில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
இருசக்கர வாகனங்கள் செல்ல தடை
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடைகள் அமைப்பதில் சிறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி சில்லரை காய்கறி மற்றும் பூ கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கும், மொத்த பூ கடைகள் ஊரீசு பள்ளி மைதானத்துக்கும் மாற்றப்படுகிறது. பழைய மீன்மார்க்கெட்டில் கடைகள் இயங்காது. வழக்கம்போல் மொத்த காய்கறி கடைகள் மாங்காய் மண்டி மைதானத்தில் இயங்கும். நேதாஜி மார்க்கெட்டில் மளிகை கடைகள் மட்டும் செயல்படும்.
மேலும் மண்டித் தெருவில் நாளை (சனிக்கிழமை) முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. மண்டி தெருவில் தற்போது இயங்கி வரும் மொத்த அரிசி மற்றும் பலசரக்கு விற்பனை கடைகளில் மொத்த கொள்முதல் பெற வரும் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட கடைகள் மூலமாக அடையாள அட்டைகள் வழங்கப்படும். அவர்களை தவிர பொதுமக்கள் யாருக்கும் சில்லரை விற்பனை செய்ய அனுமதியில்லை. மேலும் மண்டி தெருவில் மாலை 6 மணி முதல் பொருட்கள் இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story