ஊரடங்கு விதியை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள் பொறுப்பும் கடமையும் நமக்குதானே


ஊரடங்கு விதியை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள் பொறுப்பும் கடமையும் நமக்குதானே
x
தினத்தந்தி 13 May 2021 10:57 PM IST (Updated: 13 May 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதியை பொதுமக்கள் காற்றில் பறக்கவிட்டு உள்ளனர். பொறுப்பும், கடமையும் நமக்குதானே எனவே வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு தப்பலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

கோவை

ஊரடங்கு விதியை பொதுமக்கள் காற்றில் பறக்கவிட்டு உள்ளனர். பொறுப்பும், கடமையும் நமக்குதானே எனவே வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு தப்பலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

கொரோனா பரவல் 

சீனாவில் தனது பணத்தை தொடங்கிய கொடூர கொரோனா, உலகத்தையே புரட்டிப்போட்டு விட்டது. தொடங்கிய இடத்தில் தற்போது கொரோனா இல்லை என்றாலும், தற்போது இந்தியாவில் தினமும் பலரை சுருட்டி வாரிக்கொண்டே இருக்கிறது. 

2-வது அலையாக வந்து ஆட்டம்போடும் கொரோனாவுக்கு நமது நாட்டில் தினமும் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

காற்றில் பறக்கும் விதிகள் 

மளிகை மற்றும் காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதால் ஊரடங்கின்போது பொதுமக்கள் தேவையில்லா மல் வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசிய வேலைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

ஆனால் கொரோனா குறித்து எவ்வித பயமும் இல்லாமல் பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே செல்வதால் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளது. இதனால் கோவையின் முக்கிய சாலைகளில் பார்த்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்கள் சென்று வருகின்றன. 

பொறுப்பு, கடமை

முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் பயப்படுவது இல்லை. சில இடங்களில் போலீசார் சாலைகளில் சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கூறிவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுவிடுகிறார்கள். 

ஊரடங்கு நேரத்திலும் இதுபோன்று பொதுமக்கள் பயமின்றி வெளியே செல்வதால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. 

அதுபோன்று ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தால் பாதுகாப்பு நமக்குதான் என்ற பொறுப்பும், கடமையும் பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும் என்று அறிவுரையும் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தவிர்க்க வேண்டும் 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதே கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கத்தான். ஆனால் அதை உணராமல் பொதுமக்கள் வெளியே சென்று வருகிறார்கள். 

இதனால் கொரோனா இன்னும் அதிகமாகதான் பரவும். வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு தப்பலாம். கடைகளில் சென்று தினமும் பொருட்கள் வாங்காமல், 10 நாட்களுக்கு தேவையான பொருட்களை  ஒரேநாளில் வாங்கிச்சென்றால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 

இதை தவிர்த்துவிட்டு அலட்சியமாக வெளியே செல்லும்போது பாதிப்பு பொதுமக்களுக்குதான் என்பதை உணர வேண்டும். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பதுடன், குழந்தைகளையும் வெளியே விடக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

வாகனங்கள் பறிமுதல் 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  எனவே தேவை இல்லாமல் வெளியே வந்தால் சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றனர். 

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த 133 நாட்களில் 53,611 பேரை பாதித்தது இருப்பதுடன், 170 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story