இஸ்ரேலில் நடந்த குண்டுவெடிப்பில் கேரளாவை சேர்ந்த நர்ஸ் பலி
இஸ்ரேலில் நடந்த குண்டுவெடிப்பில் கேரளாவை சேர்ந்த நர்ஸ் பலியானார்.
பாலக்காடு,
இடுக்கி மாவட்டம், கீரித்தோடு காஞ்சிரம் தானம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சவுமியா (32). நர்சான இவர் இஸ்ரேல் நாட்டில் உள்ள காசாநகர் அருகே தங்கி இருந்து ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, தான் வேலை செய்து வரும் வீட்டின் அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்துவதாக தெரிவித்தார்.
அப்போது திடீரென்று டமார் என்ற சத்தம் கேட்டபடி செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், இஸ்ரேல் நாட்டில் உள்ள தனது உறவினரிடம் கேட்டறிந்தார். அப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சவுமியா பலியானது தெரியவந்தது.
சவுமியா, கஞ்சிக்குழி ஊராட்சி முன்னாள் கவுன்சிலர்களான சதீசன்-சாவித்திரி தம்பதியின் மகள் ஆவார். இது குறித்து தகவல் அறிந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். அத்துடன் சவுமியாவின் உடலை கேரளாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறை மந்திரியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Related Tags :
Next Story