அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆய்வு
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆக்சிஜன் இருப்பு குறித்து அவர் கேட்டறிந்தார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆக்சிஜன் இருப்பு குறித்து அவர் கேட்டறிந்தார்.
எம்.எல்.ஏ. ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்்தநிலையில் நேற்று ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோருடன் சென்று ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏதுவாக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1500 படுக்கைகளும், 4 தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் வசதி
இதுதவிர ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி, பரமக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 425 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 320 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 87 நபர் ஆக்சிஜன் வசதியுடன் உள்ள படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆஸ்பத்திரியில் 600 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளதாகவும், 11 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலன் மூலம் தினமும் சராசரியாக 1200 முதல் 1400 லிட்டர் ஆக்சிஜன் நோயாளிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
தரமான உணவு
இதனை கேட்டறிந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கொரோனா நோயாளிகளுக்கு முறையான உணவு வழங்கவில்லை என்று புகார் செய்தவரை செல்போனில் தொடர்பு கொண்டு தற்போது முறையான உணவு சரியான நேரத்திற்கு வழங்கப்படுகிறதா என்றும், ஏதும் குறைகள் இருந்தால் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். தற்போது உணவு சரியான நேரத்திற்கு வழங்கப்படுவதாக அந்த நபர் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு தரமான முறையில் போதிய அளவு வழங்கப்படுவதை ஆஸ்பத்திரி அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அல்லி, முதன்மை டாக்டர் மலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story