கொரோனாவால் இறந்தவர் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றதால் பரபரப்பு


கொரோனாவால் இறந்தவர் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 May 2021 11:29 PM IST (Updated: 13 May 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே கொரோனாவால் இறந்தவரின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள மாவிடுதிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் கடந்த 7-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். அதன்பிறகு அவரை குடும்பத்தினர் தங்கள் கிராமத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது கிராமத்துக்கு வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. இறந்தவரின் உடலை குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்த தங்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இதை அறிந்த கிராமத்தினர் அவரது உடலை அடக்கம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் இறந்தவரின் உடலை குடும்பத்தினர் கிராமத்துக்கு எடுத்து சென்றது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தேவி தேவகோட்டை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இறந்தவரின் உடலை தேவகோட்டை சுடுகாடு அருகே உள்ள விருசுழி ஆற்றின் கரையோரத்தில் ஆழமாக குழி தோண்டி புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


Next Story