திருச்செங்கோட்டில் ஊரடங்கு காரணமாக ரூ.5 கோடி துணிகள் தேக்கம்; விசைத்தறி கூடங்கள் மூடல்


திருச்செங்கோட்டில் ஊரடங்கு காரணமாக ரூ.5 கோடி துணிகள் தேக்கம்; விசைத்தறி கூடங்கள் மூடல்
x
தினத்தந்தி 13 May 2021 11:34 PM IST (Updated: 13 May 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் ஊரடங்கு காரணமாக ரூ.5 கோடி துணிகள் தேக்கமடைந்துள்ளதால், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன.

எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் ஊரடங்கு காரணமாக ரூ.5 கோடி துணிகள் தேக்கமடைந்துள்ளதால், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன.
விசைத்தறி கூடங்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சூரியம்பாளையம் சிறு விசைத்தறியாளர்கள் சங்கத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறிகளில் வேலை பார்க்க தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்துள்ள துணிகளை வெளி இடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் ரூ..5 கோடி மதிப்பிலான துணிகள் விசைத்தறி கூடங்களில் தேக்கமடைந்துள்ளன.
நஷ்டம்
மேலும் துணிகளை உற்பத்தி செய்தால் விசைத்தறியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு விசைத்தறி கூடங்களை 15 நாட்கள் மூட உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று சூரியம்பாளையம் பகுதியில் சிறு விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இதுகுறித்து சூரியம்பாளையம் சிறு விசைத்தறியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் குப்புசாமி, பொருளாளர் ரவி கூறியதாவது:-
விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிகளின் தேக்கம், நூல் விலை தொடர்ந்து உயர்வு, தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் விசைத்தறியாளர்கள் சிக்கி, சிரம்மப்பட்டு வருகிறோம். இதன் காரணமாக விசைத்தறி கூடங்களை 15 நாட்கள் மூட முடிவு செய்துள்ளோம். இதனிடையே கடந்த ஓராண்டாக கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. 
வாழ்வாதாரம் பாதிப்பு
எனவே தமிழக அரசு 2 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது விசைத்தறியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தேக்கமடைந்துள்ள துணிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களது வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story