ராணுவ அதிகாரி வீட்டில் திருடிய நேபாளத்தை சேர்ந்த 4 பேர் கைது
பெங்களூருவில் ராணுவ அதிகாரி வீட்டில் திருடிய நேபாளத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பெங்களூரு:
பெங்களூருவில் ராணுவ அதிகாரி வீட்டில் திருடிய நேபாளத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
4 பேர் கைது
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.எம். பாளையா பகுதியில் வசிப்பவர் பிரேம் கிருஷ்ணதாஸ். இவர், ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு ராஜனகுன்டேயில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் பிரேம் கிருஷ்ணதாஸ் வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், டி.ஜே.ஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 4 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் நேபாளத்தை சேர்ந்த மனோஜ் (வயது 37), கேசவராஜ் (56), விக்ரம் சிங் (36), பிரகாஷ் பகதூர் (23) என்று தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் பெங்களூருவில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
ரூ.75 லட்சம் மதிப்பு
காவலாளி வேலைக்கு சென்றாலும் எளிதில் பணம் சம்பாதிக்க 4 பேரும் ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் கதவை உடைத்து திருடி வந்துள்ளனர். அதுபோல், ராணுவ அதிகாரி பிரேம் கிருஷ்ணதாஸ் வீட்டிலும் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடியது தெரியவந்தது. பெங்களூருவில் ஊரடங்கு இருந்ததால் அந்த நகைகளை விற்க முடியாததால், நேபாளத்தில் உள்ள தங்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர்.
கைதானவர்களிடம் இருந்து 221 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி, வைர நகைகள், விலை உயர்ந்த வைர கற்கள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின்மதிப்பு ரூ.75 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேர் மீதும் டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story