மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்கு பின் நடத்த உத்தரவு
மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை, மே
மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போட்டியின்றி தேர்வு
மதுரை மாவட்ட தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் பெரியகருப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை ஆவினில் 17 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, 11 பேர் இயக்குனர்களாக போட்டியின்றி தேர்வானதை ரத்து செய்தது. முறையாக அறிவிப்பு வெளியிட்டு 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, 11 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற 24-ல் வாக்குப்பதிவு, அடுத்த நாள் (25-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்ய வேண்டும்
இந்த தேர்தலில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வந்து வாக்களிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பலதரப்பிலும் பாதிப்பு ஏற்படும். எனவே, மதுரை ஆவினில் 11 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர தடை விதிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஊரடங்கு நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகே தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
Related Tags :
Next Story