கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 4 கடைகளுக்கு அபராதம்


கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 4 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 May 2021 1:27 AM IST (Updated: 14 May 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்து இருப்பதால், பொதுமக்கள் ஜெயங்கொண்டம் கடை வீதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களும், டீக்கடைகளில் டீக்குடிக்க வருபவர்களும், அரசு மருத்துவமனைக்கு வருபவர்களும் என பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள்  அதிரடி நடவடிக்கையாக நேற்று அனைத்து டீக்கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட சில டீக்கடை மற்றும் மற்ற கடைக்காரர்கள் அவசர அவசரமாக கடைகளை பூட்டிவிட்டு கடைக்கு அருகே நின்றனர். இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் விமலா மற்றும் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இதில் வெற்றிலை கடை, டீ கடை ஆகிய 2 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும், சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 கடைக்காரர்களுக்கு தலா ரூ.200 வீதம் 400 ரூபாயும் என மொத்தம் ரூ.1,400 அபராதம் விதித்து வசூலித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். இதனை வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்கள் அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும், என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story