கொரோனா நோயாளிகள், பொதுமக்களுக்கு வழிகாட்ட ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ‘அவசர கால சேவை மையம்’; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
கொரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்ட, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ‘அவசர கால சேவை மையம்’ அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
கொரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்ட, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ‘அவசர கால சேவை மையம்’ அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், திருமகன் ஈவெரா, பண்ணாரி, ஜெயக்குமார், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக துறைவாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அவசர கால சேவை மையம்
அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணிகளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு நான் நியமிக்கப்பட்டு உள்ளேன்.
இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் பொதுமக்கள், நோயாளிகளுக்கு வழிகாட்டும் வகையிலும், உரிய ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் ‘அவசர கால சேவை மையம்’ (வார் ரூம்) அமைக்கப்பட உள்ளது.
மனநல ஆலோசகர்
கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ள இந்த அவசர கால சேவை மையத்தில் 10 பேர் பணியில் இருப்பார்கள். இதில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மனநல ஆலோசகர் ஆகியோர் இருப்பர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த ‘அவசர கால சேவை மையம்’ செயல்படும். இவர்களின் தொலைபேசி எண்கள் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள், ஆலோசனைகள், எங்கு சிகிச்சை பெறுவது, ஒவ்வொரு மருத்துவமனையிலும் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளது, ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவசர கால சேவை மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் 5 பேர் கொண்ட ஆலோசனை குழுவும் செயல்படும். இந்த குழுக்களிடம் மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கை விவரங்கள், அருகாமையில் உள்ள ெகாரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பரிசோதனை மையம்
பொதுமக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக கூறி எந்த பரிசோதனையும் மேற்கொள்ளாமல் நேரடியாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேரக்கூடாது. அறிகுறிகள் இருந்தால் அருகாமையில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களில் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வந்த பிறகு ஸ்கிரீனிங் சென்டர்களுக்கு சென்று எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தேவையான சிகிச்சைகளை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை என்பது கிடையாது. லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா சிகிச்ைச மையத்தில் சிகிச்சை பெறலாம். இதேபோல் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தும் போது அஜாக்கிரதை காரணமாக குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் எளிதில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அருகாமையில் உள்ள கொரானா சிகிச்சை மையங்களுக்கு சென்று தனிமைப்படுத்துவது அவசியம்.
ரெம்டெசிவிர் மருந்து
ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக்கூடம், கல்லூரிகள் என 60 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளை விட கொரோனா சிகிச்சை மையங்களில் அதிக வசதிகள் உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சித்தா சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு இன்றி இருந்து வருகின்றது.
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி, பெருந்துறை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தேசிய ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியின் அளவு மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் அளவு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சேமிப்பு அலகுகளையும் பார்வையிட்டார். பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பது குறித்தும் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story