ஊரடங்கு அமலில் உள்ளபோது மகளிர் சுய உதவி குழு கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் நிதி நிறுவனங்கள்; சத்தியமங்கலம்- பவானிசாகர் பகுதி பெண்கள் குற்றச்சாட்டு


ஊரடங்கு அமலில் உள்ளபோது மகளிர் சுய உதவி குழு கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் நிதி நிறுவனங்கள்; சத்தியமங்கலம்- பவானிசாகர் பகுதி பெண்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 May 2021 2:31 AM IST (Updated: 14 May 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமலில் உள்ளபோது மகளிர் சுய உதவி குழு கடனை திருப்பி செலுத்த தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பவானிசாகர்
ஊரடங்கு அமலில் உள்ளபோது மகளிர் சுய உதவி குழு கடனை திருப்பி செலுத்த தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
மகளிர் சுய உதவி குழு
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 24-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுவதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறாா்கள். 
சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்களை ஏற்படுத்தி பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று உள்ளனர். அவ்வாறு கடன் பெற்ற பெண்கள் பல்வேறு சிறு தொழில்களை தொடங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்கள்
இதற்கிடையே சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதி மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் கடன்களை திருப்பி செலுத்துமாறு சிறு, குறு நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கடன் வசூலை நிறுத்தக்கோரி தங்களுடைய கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘நாங்கள் மகளிர் சுய உதவி குழு கடன் பெற்று பல்வேறு சிறு தொழில்களை செய்து வருகிறோம். தற்போது ஊரடங்கு காரணமாக நாங்கள் அனைவரும் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகிறோம். இதற்கிடையே எங்களுக்கு கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் குழு பெண்களிடம் கடனை திருப்பி செலுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றன.
கோரிக்கை
ஏற்கனவே வேலை இழந்து தவித்து வரும் நிலையில் எங்களால் எப்படி கடனை திருப்பிச் செலுத்த முடியும். முழு ஊரடங்கு முடிந்து நிலைமை சீராகும் வரை தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழு கடன்களை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 
இதில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கடன் வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதுடன், ஊரடங்கு முடிந்து நிலைமை சீரடையும் வரை கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story