சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை


சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 14 May 2021 2:32 AM IST (Updated: 14 May 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சேலம்:
சேலத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இடி, மின்னலுடன் மழை
கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானதால் பொதுமக்கள் அவதியுற்றனர். இதனிடையே அவ்வப்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
சேலத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. மாவட்டத்தில் நேற்று வெயிலின் அளவு 99 டிகிரியாக பதிவாக உள்ளது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்தது. ஆனால் இந்த மழை சிறிது நேரமே பெய்தது. அதைதொடர்ந்து இரவு சுமார் 8 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
மாநகரில் அழகாபுரம், அஸ்தம்பட்டி, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழை ½ மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பின்னர் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது.
இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக சேலத்தில் மாலை, இரவு பொழுதில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story