1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 14 May 2021 6:49 AM IST (Updated: 14 May 2021 6:50 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நிரம்பி வரும் படுக்கைகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டுகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன. 

இதனால் நீலகிரியில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 3 கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் செய்யப்பட்டு கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு கடும் உடல் நிலை பாதிப்பில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று அறிகுறி தென்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு பகுதிகள்

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டாரங்கள், 4 நகராட்சிகள் என மொத்தம் 340-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் 84 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. 

அப்பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே வரக்கூடாது. வெளிநபர்கள் உள்ளே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தொற்று அறிகுறி இருந்தால் தாமாக முன் வந்து பரிசோதனை செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றி வசிப்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா? என்று களப்பணி மேற்கொள்ள தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இதன் மூலம் ஆரம்ப நிலையில் நோயை கண்டறிந்தால் சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும்.
நீலகிரியில் இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டாமல் முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story