தாமரைப்பூக்கள் விற்பனை பாதிப்பு
உடுமலை பகுதியில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் செங்குளத்தில் தாமரைப்பூக்கள் பறிக்காமல் வீணாகி வருகிறது.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் செங்குளத்தில் தாமரைப்பூக்கள் பறிக்காமல் வீணாகி வருகிறது.
நீர்ப்பூக்கள்
தாமரை இந்தியாவின் தேசிய மலர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வியட்நாமுக்கும் அதுதான் தேசிய மலர் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். பெண்கள் தலையில் சூடாத பூ. ஆனால் அனைவரும் தலையில் வைத்துக் கொண்டாடும் பூ என்று தாமரை பூக்களை குறிப்பிடுவார்கள். இறைவழிபாட்டில் தாமரைக்கு சிறப்பிடம் உண்டு என்பதால் மட்டுமல்ல தாமரையின் விதை, இதழ், கிழங்கு என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.
பூக்களை பொதுவாக கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ என்று 3 வகைகளில் குறிப்பிடுவார்கள். இதில் நீர்ப் பூக்களில் சிறந்த இடம் தாமரைக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த தாமரை பூக்கள் உடுமலையையடுத்த செங்குளம் பகுதியில் தற்போது பறிக்க ஆளில்லாமல் பூத்துக் கிடக்கிறது. ஏழு குள பாசனப் பகுதிகளில் ஒன்றான செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
திருமூர்த்தி அணையிலிருந்து இந்த குளத்துக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் இருக்கும். இதனால் இந்த குளத்தின் ஒரு பகுதியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன. இந்த பூக்கள் ஒரு சில குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. குளத்தில் பூத்துள்ள தாமரை பூக்களைப் பறித்து விற்பனை செய்வதன் மூலம் இவர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இவர்களிடமிருந்து வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள் கோவில் வாசல்கள் மற்றும் கடைகளில் விற்று வருகிறார்கள்.
தாமரைக் கிழங்குகள்
இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் தாமரைப் பூக்களை வாங்குவதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். இதுகுறித்து தாமரை சேகரிப்போர் கூறியதாவது
செங்குளம் மற்றும் செட்டிக்குளங்களில் தாமரை விதைகள் தூவப்பட்டதால் அதிக அளவில் முளைத்துள்ளது. இந்த குளங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் போது தாமரைப் பூக்களை சேகரித்து விற்பனை செய்வோம். தண்ணீர் குறைந்து விட்டால் தாமரைக் கிழங்குகளை சேகரித்து விற்பனை செய்வோம். ஆனால் தாமரைப் பூக்களைப் பொறுத்தவரை இறை வழிபாட்டுக்கானதாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தாமரைப் பூக்கள் மற்றும் தண்டுகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை.இதனால் தற்போது பூக்களை விற்பனை செய்வது சிரமமான விஷயமாக உள்ளது.
எனவே பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விட்டோம். இதுதவிர தாமரை இலையில் சாப்பிட்டால் நரை விரைவில் வராது என்பார்கள். கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் தாமரை இலையை உணவருந்த பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தாமரையின் பயன்களை மக்கள் அறிந்துகொண்டால் எல்லா காலங்களிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
---
தாமரையின் வேறு பெயர்கள்
தாமரை என்று மட்டுமே நம்மால் அறியப்படும் இந்த பூவுக்கு பல பெயர்கள் உண்டு. அவை தெய்வமலர், அரவிந்தம், கமலம், பொன்மனை, பங்கஜம், கோகனதம், சலசம், நளினம், சரோருகம், வாரிஜம், அம்புஜம், கஞ்சம், நீரஜம், பத்மம், முண்டகம், இராஜீவம், அம்போருகம், பங்கேருகம் என் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
வறட்டு இருமலுக்கு மருந்து
செந்தாமரையின் இதழ்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் காலையில் குடித்தால் வறட்டு இருமல் குணமாகும். தாமரை இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனங்கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு சத்தை குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
---
Related Tags :
Next Story