காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரம்
திருப்பூரில் எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி வளாகங்களில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
திருப்பூரில் எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி வளாகங்களில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காய்கறி மார்க்கெட்
திருப்பூர் மாநகரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். காய்கறி, மளிகை கடைகள், பலசரக்குக் கடைகள் மதியம் 12 மணி வரை திறந்து செயல்படுகிறது. இதனால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கடைக்கு வந்து செல்கிறார்கள்.
காலை நேரத்தில் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. மேலும் திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கல்லூரி வளாகம்
இதை தவிர்க்கும் வகையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் பாதி கடைகளை பிரித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் ஆய்வு செய்தார். வெள்ளை நிற கோடுகள் போட்டு அதில் வியாபாரிகள் வரிசையாக அமர்ந்து காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் சமூக இடைவெளி விட்டு இந்த பணிகள் நடைபெற்றது. மேலும் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவையும் அங்கு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மைதானம்
இதுபோல் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டை பிரித்து திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்படுகிறது. சமூக இடைவெளியுடன் 75 கடைகள் இருக்கும் வகையில் காவல்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த பணியை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வருகிற திங்கட்கிழமை முதல் இந்த தற்காலிக சந்தைகள் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
-------------------
Related Tags :
Next Story