வேலூர் மாவட்டத்தில் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும்
வேலூர்மாவட்டத்தில் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
வேலூர்
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், போக்குவரத்துதுறை ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தென்காசி ஜவஹர் கேட்டறிந்தார். மேலும் ஆக்சிஜன் தேவை, படுக்கை வசதி, எந்தெந்த பகுதிகளில் எவ்வாறு தீவிரமாக கொரோனா பரவுகிறது. அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் தென்காசி எஸ்.ஜவஹர் பேசியதாவது:-
மதிப்பு உயர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்னும் 2 வாரங்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது மிகப்பெரிய சவாலாக அமையும். எனவே நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, வினியோகம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நோயாளி உயிரை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆக்சிஜன் மதிப்பு தற்போது தங்கத்தை விட உயர்ந்துள்ளது. தொற்று அதிகம் உள்ள பகுதிகள் மட்டும் அல்லாமல் குறைவாக தொற்று உள்ள பகுதிகளிலும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story