ரம்ஜான் பண்டிகை: வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
கடலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கடலூர்,
ரம்ஜான் பண்டிகை
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மசூதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனால் நேற்று கடலூர் மாவட்டத்தில் மசூதிகள் எதுவும் திறக்கப்படவில்லை. கடலூர் மஞ்சகுப்பம், முதுநகர், செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள் மூடப்பட்டு தொழுகை எதுவும் நடைபெறவில்லை.இதையடுத்து முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திக் கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
வாழ்த்து
வழக்கமாக தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து கூறுவது வழக்கம்.ஆனால் நோய்த்தொற்று பரவலால் ஒருவருக்கொருவர் கைகூப்பி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ரம்ஜான் பண்டிகையின்போது உறவினர், நண்பர்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வகைகளை பரிமாறிக் கொள்வார்கள்.
ஆனால் நேற்று இதை பெரும்பாலானோர் தவிர்த்தனர். ஒரு சிலர் நெருங்கிய உறவினர்களை அழைத்து உதவி செய்தனர். இது தவிர செல்போன் மூலமாகவும், வாட்ஸ்- அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
விருத்தாசலம் புதுப்பேட்டை காயிதே மில்லத் தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஏராளமான முஸ்லிம்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் உள்பட பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் தங்கள் வீடுகள் மற்றும் திறந்த வெளி பகுதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
Related Tags :
Next Story