சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு


சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 14 May 2021 10:08 PM IST (Updated: 14 May 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அருகே சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம், 

சுகாதாரமற்ற குடிநீர்

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீநெடுஞ்சேரி காலனியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து பட்டறை கள தெருவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடிநீரானது கடந்த சில மாதங்களாக கரித்துகளுடனும் மஞ்சள் நிறத்துடனும் சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் ஆனது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பல தடவை முறையிட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முற்றுகை-மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தினந்தோறும் தடையின்றி சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவகுமார், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முருகானந்தம், ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், குடிநீர் பிரச்சினையை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதோடு, அதுவரை தற்காலிகமாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினிேயாகம் செய்யப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story