தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்


தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 14 May 2021 10:50 PM IST (Updated: 14 May 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கோரோனா தடூப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம், கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பற்றிய ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம், ஆக்சிஜன் தேவைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் தேவைகள், படுக்கை வசதிகள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணித்தல், கொரோனோ உள்ளவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகளை ஏற்படுத்தி தருதல் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விளக்கிக் கூறினார்.
பின்னர் கூட்டத்தில் தடுப்பூசி மையங்களை அதிகரித்தல், தடுப்பூசிகளை கூடுதலாக பெறுதல், கிராமப்புறங்களில் அதிக அளவில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுதல், முன்கள பணியாளர்களுக்கு வந்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல், கிராமப்புறங்களில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து கொரோனா விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கனிமொழி எம்.பி.
கூட்டத்தின் முடிவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்களை அனுப்பி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சாதாரண காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்பு தெரியாத நிலையில் மற்றவர்களுக்கு அதிக அளவில் கொரோனாத் தொற்றை பரப்பி வருகின்றனர்.
எனவே அந்தந்த பகுதிகளில் பல்வேறு முகாம்களை நடத்த வேண்டும். தொற்று கண்டறியப்பட்டவர்கள் வகைப்பிரிப்பு மையங்களில் வகைப்படுத்தப்பட்டு மருத்துவ தேவை உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் தற்போது சித்த மருத்துவ மையங்களும் தொடங்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவர்களை இம்மையங்கள் மூலமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து உள்ளாட்சி பிரதிகளுடன் சர்வே செய்ய வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் மருத்துவ மொபைல் யூனிட்டுகளை பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து தடுப்பூசியை அதிக அளவில் போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் சரண்யா, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி எஸ்.அமிர்தராஜ். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர்கள் சங்கரநாராயணன், தனப்ரியா, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதிபாலன், இணை இயக்குனர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு
முன்னதாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்க்கொண்டார். கொரோனா சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மற்றும் ஆலோசனை மையத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கனிமொழி எம்.பி. மாவட்ட மருத்துவப்பணி இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாரயணணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், நகராட்சி ஆணையர் ராஜாராம், என்ஜினீயர் கோவிந்தராஜ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது;-
கூடுதல் டாக்டர்கள் நியமிக்க...
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர், இறப்பு விகிதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. எனவே கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கனிமொழி எம்.பியுடன் ஆய்வு செய்து வருகிறோம். கோவில்பட்டி அரசு மருத்துவனையில் ஆய்வு செய்த போது கூடுதலாக மருத்துவர்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். எனவே கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பணி அமர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி லெட்சுமி அம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, நேஷனல் பொறியியல் கல்லூரியில் கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story